50. அருள்மிகு ஆபத்சகாயநாதர் கோயில்
இறைவன் ஆபத்சகாயநாதர்
இறைவி பெரியநாயகி
தீர்த்தம் மங்கள தீர்த்தம், காவிரி
தல விருட்சம் கதலி (வாழை)
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருப்பழனம், தமிழ்நாடு
வழிகாட்டி திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirupazhanam Gopuramசுசரிதன் என்னும் அந்தணன் யாத்திரை மேற்கொண்டு இத்தலம் வந்து தங்கினான். அன்றிரவு அவனது கனவில் யமதர்மன் தோன்றி, 'இன்றிலிருந்து ஐந்தாவது நாள் நீ இறந்து விடுவாய்' என்று கூறிவிட்டு மறைந்தான். அந்தணன் கண்விழித்து இத்தலத்து ஈசனை வேண்ட, அவரும், நீ உடனே திருவையாறுக்கு சென்றால் உயிர்பிழைத்துக் கொள்வாய் என்று அருளினார். ஆபத்தில் உதவியதால் இத்தலத்து மூலவர் 'ஆபத்சகாயநாதர்' என்று வணங்கப்படுகின்றார்.

மூலவர் 'ஆபத்சகாயநாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பிகை 'பெரியநாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். வெளிப்பிரகாரத்தில் 'சுந்தர நாயகி' என்ற மற்றொரு அம்மன் சன்னதியும் உண்டு.

Tirupazhanam Moolavarதிருவையாறு சப்தஸ்தானத் தலங்களுள் இரண்டாவது தலம். திருவையாறு, திருவேதிகுடி, திருசோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகியவை மற்ற தலங்கள். சித்ரா பௌர்ணமி அன்று சப்தஸ்தானத் திருவிழா என்று வழங்கப்படும் ஏழூர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

இத்தலத்து மூலவரை திருமாலும், இலக்குமியும் பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோயில் பிரகாரத்தின் பின்புறத்தில் ஸ்ரீவேணுகோபாலன் சன்னதி ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டு சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இவ்வூருக்கு அருகில் அப்பூதி அடிகள் தொண்டு செய்த திங்களூர் தலம் உள்ளது.

அருணகிரிநாதர் தமது திருப்புகழில் 'ஏழு திருப்பதி' என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும். சப்தஸ்தானத் தலங்களுள் திருவையாறு, திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய தலங்களுக்கு மட்டும் தனித் திருப்புகழ் உள்ளது.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com